Wednesday, March 18, 2015

2. ஆத்ம விசாரம்!

ஆன்மீகம் என்றால் என்ன?

கடவுள் நம்பிக்கை, பக்தி, தவம், நற்செயல்கள் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளும் வழி, இவ்வுலக வாழ்க்கை முடிந்ததும் சொர்க்கத்துக்குப் போக வழி தேடுதல், ஆசைகளைத் துறத்தல், பிறரிடம் அன்பு காட்டுதல், பிறர்க்கு உதவுதல், தன்னலம் இன்மை,  தியாக உணர்வு, பற்றற்ற வாழ்க்கை, துறவு, தெய்வீகச் சிந்தனைகள், தியானம் போன்ற முயற்சிகள் மூலம் மனதைக் கட்டுப்படுத்துதல் அல்லது கடவுளைத் தேடுதல், அறவழி நடத்தல் போன்ற பல செயல்கள் ஆன்மீகம் என்ற வட்டத்துக்குள் அடங்குவதாகக் கொள்ளலாம்.

கடவுள் தொடர்பில்லாத சில செயல்களும் இந்தப் பட்டியலில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக, பிறர்க்கு உதவுதல், தன்னலம் இன்மை போன்றவை கடவுள் நம்பிக்கையுடன் தொடர்பில்லாதவை. 

பொதுவாக ஆன்மீகம் என்ற சொல் கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டாலும், அதன் உண்மையான பொருள் இறைவழிபாடு என்ற கருத்தைத் தாண்டியது.

ஆத்மா என்ற சொல்லிலிருந்துதான் ஆன்மீகம் என்ற சொல் வந்தது என்று முதலில் பார்த்தோம். எனவே ஆத்மா என்றால் என்னவென்று நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆத்மா என்ற சொல்லுக்குப் பலவிதமான விளக்கங்கள் கூற முடியும் என்றாலும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆத்மா என்பது உடல், மனம் இவற்றுக்கு அப்பாற்பட்டது என்று கூறலாம்.

ஆத்மா பற்றிய இந்த விளக்கத்தில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன.

1) ஒரு பொருளை விளக்கும்போது அது இன்னொன்று இல்லை என்று விளக்குவது முழுமையான விளக்கமாகுமா? ஒரு பொருளின் நிறம் என்ன என்ற கேள்விக்கு 'இது கருப்பு இல்லை' என்று பதில் சொன்னால், அந்தப் பொருள் வெள்ளையாகவோ, சிவப்பாகவோ, பச்சையாகவோ, மஞ்சளாகவோ, நீலமாகவோ இருக்கலாம். ஆனால் இரண்டு நிறங்கள்தான் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக கருப்பு-வெள்ளை புகைப்படம். இத்தகைய புகைப்படத்தின் எந்தப் பகுதியும் ஒன்று கருப்பாக இருக்கும் அல்லது வெள்ளையாக இருக்கும். எனவே குறிப்பிட்ட ஒரு இடம் கருப்பு இல்லை என்று சொன்னால் அது வெள்ளை என்று உறுதியாக முடிவு செய்யலாம்.

சில சமயம் எதிர்மறை விளக்கங்கள் கூட முழுமையான பொருளைத் தரும். ஒன்றை 'இது' என்பதை விட 'இது இல்லாதது' என்று குறிப்பிடுவது இன்னும் ஆழமான பொருளைத் தரும். நாம் பயன்படுத்துகிற சில சொற்களை எடுத்துக் கொள்வோம். 'ஆரோக்கியம்' என்றால் உடல் நலமாக இருப்பது என்று பொருள். இந்தச் சொல் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். சம்ஸ்கிருதத்தில் 'ரோகம்' என்றால் 'நோய்' என்று பொருள். தமிழிலும் இந்தச் சொல் இதே பொருளில் பயன்படுத்தப் படுகிறது (உதாரணம்: குஷ்ட ரோகம், சர்வரோக நிவாரணி போன்ற சொற்கள்). ஆரோக்கியம் என்றால் நோயற்ற நிலை அல்லது நோயற்ற தன்மை என்று பொருள். 'நான் நலமாக இருக்கிறேன்' என்பதை விட 'நான் நோய் இல்லாமல் இருக்கிறேன்' என்பது இன்னும் தெளிவாக இருக்கிறது அல்லவா?

நலம் என்று சொன்னால் கூட அது பொதுவான பொருளைத்தான் குறிக்கும். ஆனால் 'நோயற்ற' என்ற சொல் முழுமையான உடல் நலத்தைக் குறிக்கிறது அல்லவா?

விமலா, அமலா, நிர்மலா போன்ற பெயர்கள் உண்டு. இவற்றின் பொருள் என்ன? மலம் என்றால் அழுக்கு. விமலம், அமலம், நிர்மலம் என்ற சொற்கள் மாசற்ற என்ற பொருளைக் கொடுக்கின்றன. 'மாசற்ற' என்ற சொல் கூட மாசு (கறை அல்லது குற்றம்) இல்லாத என்ற பொருளின் மூலம் தூய்மையைக் குறிக்கிறது. 'தூய்மையான' என்பதை விட, 'அப்பழுக்கற்ற' என்ற சொல் இன்னமும் தூய்மையாக ஒலிக்கிறது அல்லவா?

உண்மை என்றால் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உண்மை என்பது அபாயகரமான ஒரு பொருள். அதனால்தான் நம்மில் பலர் அதனிடமிருந்து விலகி நிற்கவே விரும்புகிறோம்!

சரி, உண்மையை எப்படி வரையறுப்பது? திருவள்ளுவர் சொல்கிறார்.

'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
 தீமை இலாத சொலல்.'

'யாருக்கும் தீமை விளைவிக்காத சொல்தான் வாய்மை'  என்கிறார் திருவள்ளுவர்.

நாம் பொதுவாகப் பயன்படுத்தும் 'உண்மை' என்ற சொல்லுக்கும் திருவள்ளுவர் குறிப்பிடுகிற 'வாய்மை'க்கும் சற்றே வேறுபாடு இருக்கலாம். அது இப்போது முக்கியம் இல்லை.

இந்த உதாரணங்களை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் 'ஆத்மா' என்பது உடல் மனம் இவற்றுக்கு அப்பாற்பட்டது என்று வரையறுப்பது சரிதான் என்பதை விளக்குவதற்குத்தான்.

இந்த விளக்கத்தில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டேன். முதல் பிரச்னை ஆத்மா என்ற சொல்லுக்கு 'இது இல்லை' என்பதுபோல் எதிர்மறையாகப் பொருள் சொல்லி விளக்குவது சரிதானா என்பது. இதற்கான பதிலைத்தான் நாம் இதுவரை பார்த்தோம்.

இரண்டாவது பிரச்னை 'உடல் மனம் இரண்டும் இல்லாவிட்டால் நாமே இல்லையே? நாமே இல்லை என்று ஆனபோது ஆத்மா என்பது எங்கிருந்து வந்தது?' என்பது.

உடல், மனம் இவை எவ்விதத்தில் நமக்குப் பயனுள்ளவை என்று பார்ப்போம். உடலும் மனமும்தான் நமக்கு ஒரு தனித்தன்மையைத் தருகின்றன. எல்லோர் உடலும் ஒரே மாதிரி இருந்தால் மனிதர்களை எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்?

எல்லோருடைய உடல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? ஒருவர்க்கொருவர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ரோபோக்கள் போல, ஒரே உயரம், எடை, உடலமைப்பு, முகச்சாயல் என்று ஒரே மாதிரித் தோற்றம் அளிப்பார்கள்.

மனங்களும் ஒரே மாதிரி இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஒரே மாதிரிச் சிந்தனைகள், உணர்வுகள், விருப்பங்கள் என்று தனித்தன்மை என்பது அறவே இல்லாமல் இருப்பார்கள்.

எனவே நமக்குத் தனித்தன்மை அளிப்பதே உடலும் மனமும்தான்.

ஆத்மா என்பது உடல், மனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றால் என்ன பொருள்? ஆத்மாவுக்குத் தனித் தன்மை இல்லை. அதாவது ஆத்மாவை வைத்துப் பார்த்தால் நாம் அனைவரும் ஒன்றுதான்.

எனவே ஆன்மீகம் என்றால் உலக மக்கள் அனைவரும் ஒன்றுதான் என்று கருதும் சிந்தனை என்று கூறலாம். உலக மக்கள் என்று கூறுவது கூடத் தவறு. உலகம் முழுவதையும் உள்ளடக்கியதுதான் ஆன்மீகம். மனிதர்கள், மற்ற உயிரினங்கள், உயிரற்றவைகள் இவை எல்லாம் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கியதுதான் ஆன்மீகம் என்ற கருப்பொருள்.

சித், அசித் (உயிருள்ளவை, உயிரற்றவை), சேதனம் அசேதனம் (அசையும் பொருள், அசையாப் பொருள்) என்று குறிப்பிடப்படும் எல்லாவற்றையும் குறிக்கும் சொல்தான் ஆன்மிகம் என்று கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் குறிப்பதுதான் ஆன்மீகம். இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டால் சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனை கூட ஆன்மீகம்தான்.

இப்போது தமிழ்க் காப்பியங்கள் உலகு என்ற சொல்லுடன் துவங்கும் விஷயத்துக்கு வருவோம்.உலகு என்பது ஒரு ஒருங்கிணைப்புச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

'உலகம் யாவையும்' என்று துவங்குகிறார் கம்பர்.  உலகம் முழுவதும் என்று இதற்குப் பொருள். எல்லா உலகங்களும் என்று சற்று ஆழமாகவும் பொருள் கொள்ளலாம். நம் புராணங்களில் குறிப்பிடப்படும் ஈரேழு உலகங்கள் என்றோ அல்லது universe என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பிடப்படும் 'வையம்' என்றோ பொருள் கொள்ளலாம்.

இந்தக் கடவுள் வாழ்த்தின் பொருளை நான் அறிந்த வரையில் கூற முயல்கிறேன். 'நான் அறிந்த வரையில்' என்று கூறுவதற்குக் காரணம், கம்ப ராமாயணத்துக்குப் பல அறிஞர்கள் பலவித ஆழமான பொருட்களைக் கூறியிருக்கிறார்கள். நான் சொல்லப்போவது, நான் புரிந்து கொண்ட எளிய பொருள்.

கம்பர், தாம் ராமாயணம் எழுதுவதைப்பற்றிக் கூறும்போது, 'வால்மீகி படைத்த இந்த மாபெரும் காவியத்தை நான் எழுத முற்படுவது, பாற்கடல் முழுவதையும்  ஒரு பூனை தன் நாவினால் நக்கியே குடித்து விடலாம் என்று ஆசைப்படுவது போன்ற செயல்' என்று அவையடக்கத்துடன் சொல்கிறார்.. கம்ப ராமாயணப் பாடலுக்கு நான் பொருள் எழுத முற்படுவதும் அத்தகைய செயல்தான்!

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்'

'தாம் உளவாக்கலும்' என்றால் என்ன பொருள்? உலகம் முழுவதும் தானே நிறைந்து உள்ளார் என்று பொருள்.

'நிலை பெறுத்தலும்'
உலகை உருவாக்கி அதை நிலையாக இருக்கச் செய்கிறார், அதாவது காக்கிறார்.

'நீக்கலும்'
நீக்குகிறார் அல்லது அழிக்கிறார்

'உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும்' என்ற சொற்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயல்களைக் குறிக்கின்றன.

'நீங்கலா' என்றால் இந்தச் செயல்களை விடாமல் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள். இவ்வுலகிலிருந்து நீங்காமல், தானும் அதற்குள் இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

'அலகிலா விளையாட்டுடையார்'
இது போன்ற அளவிட முடியாத விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

'அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் யாங்களே.'

நம்மைப் படைப்பது, காப்பது, அழிப்பது என்று நம்மை முழுமையாகக் கட்டுப்படுத்துபவர் நம் தலைவராகத்தானே இருக்க முடியும்? அவரை நாம் சரணடைவோம்.