Sunday, February 9, 2014

1. ஆன்மீகம் - ஒரு அறிமுகம்

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் யாங்களே.

ஆன்மீகம் என்றால் எல்லோர் மனதிலும் தோன்றுவது கடவுள் பற்றிய நினைவுதான்.

ஆன்மீகம் என்றால் என்ன? கடவுள் பக்திதான் ஆன்மீகமா அல்லது ஆன்மீகம் என்ற சொல் இதற்கு மேலும் எதையாவது குறிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயல்வதற்கு முன் இந்தப் பதிவின் துவக்கத்தில் இடம் பெற்றிருக்கும் 'உலகம் யாவையும்' என்ற கடவுள் வாழ்த்தின் பொருளைப் பார்க்கலாம்.

இந்தப் பாடல் கம்பராமாயணத்தின் முதல் பாடல் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக தமிழ்க் காப்பியங்கள் எல்லாவற்றிலுமே முதல் பாடலில் உலகம் என்ற சொல் இடம் பெற்றிருக்கும். 'உலகம் யாவையும்' என்று துவங்குவது கம்பராமாயணம். 'உலகெலாம் உணர்ந்து' என்று துவங்குவது பெரியபுராணம். 'நீராழி உலகத்து' என்று வில்லிபாரதம் துவங்குகிறது. 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்பது திருக்குறளின் முதல் குறள். இதுபோல் வேறு பல காப்பியங்களையும் குறிப்பிடலாம். ஆனால் முடியாது. ஏனென்றால் எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்!

சரி, ஏன் எல்லாத் தமிழ்க் காப்பியங்களும் 'உலகு' என்ற சொல்லில் துவங்குகின்றன? ஏன் அவை 'கடவுள்' என்று துவங்கியிருக்கக்கூடாது? மதச்சார்பின்மையின் அடையாளமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையின் பிரதிபலிப்பா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் 'உலகு' என்ற வார்த்தை முதன்மைப்படுத்தப்படுவதில் ஆன்மீகச் சிந்தனை பொதிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி, ஆன்மீகம் என்றால் என்ன? 'ஆத்மா' என்ற சொல்லிலிருந்து பிறந்ததுதான் ஆன்மீகம். ஆத்மா என்றால் என்ன? மிகவும் கடினமான கேள்வி! இவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று நினைத்தால் 'இது என்ன?' 'அது என்ன?' என்று  கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றானே என்று உங்களில் சிலர் அலுத்துக் கொள்ளலாம். பயப்படாதீர்கள்! கேள்வி கேட்பதெல்லாம் ஒரு விடையை நோக்கிப் பயணம் செய்யத்தான்.

விடையை நோக்கிய பயணம் என்று நான் சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒரு வார்த்தையில் இல்லை. 'மல்டிபிள் சாய்ஸ்' எதுவும் கிடையாது. சரியான விடையைத் தேர்வு செய்தால் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்பதற்கு வாழ்க்கை ஒரு கேம் ஷோ இல்லை.

நம்மைச் சுற்றிலும் பல கேள்விகள். சில கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைத்து விடுகிறது. சிலவற்றுக்கு விடை இல்லை. சில சுலபமான கேள்விகளுக்குக் கூட எளிதான விடைகள் இல்லை. உதாரணமாக உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள், கொடுக்கிறேன்' என்று சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்?

'நாளைக்கு வருகிறீர்களா? யோசித்து வைக்கிறேன்" என்று சில பேர் சொல்லலாம்.

 நீங்கள் கேட்டுக்கொண்டபடி கடவுள் உங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து அடுத்த நாள் வந்தாலும் உங்களிடம் பதில் இருக்குமா என்பது ஐயம்தான். ஏதோ ஒரு விடை இருக்கும். ஆனால் அது சரிதானா என்பது பற்றி உங்களுக்கே ஒரு குழப்பம் இருக்கும். 'எனக்கு 10,000 கோடி ரூபாய் வேண்டும்' என்று ஒரு பெருந்தொகையைக் கேட்டு விடலாம்தான். ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதுமா? மகிழ்ச்சி, ஆரோக்கியம், என்று வேறு பல விஷயங்களும் இருக்கின்றனவே!

மிகவும் தெளிவானவராக இருந்தால் 'எனக்கு மன நிறைவைக் கொடு' என்று கேட்பீர்கள். ஆனால் கடவுள் மன நிறைவு என்ற அந்த வரத்தைக் கொடுக்கும் வரையில் 'வெறும் மன நிறைவை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? பணநிறைவும்தானே வேண்டும்?' என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். கடைசி நிமிடத்தில் மனம் மாறி, பணம், பதவி என்று வேறேதையோ கேட்டு விடுவோம்!

ஆக, 'எனக்கு என்ன வேண்டும்?' என்ற சாதாரணக் கேள்விக்குக்கூட நம்மிடம் தெளிவான விடையில்லை. யாரிடமாவது தெளிவான விடை இருக்குமானால் அவர்கள் ஆன்மீகம் என்ற இலக்கை அடைந்து விட்டார்கள் என்பதுதான் பொருள்

சில கேள்விகளுக்கு விடை இருப்பது போல் தோன்றும். அந்த விடையை நாம் நெருங்கும்போது அது விடையல்ல என்று தெரிய வரும். தொலைவில் இன்னொரு விடை இருப்பதாகத் தோன்றும். அருகில் சென்றால் தொடுவானம் போல் அதுவும் விலகிப்போய் விடும்.

சில கேள்விகளுக்கு விடை அறிய நாம் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். விடை கிடைப்பதுபோல் தோன்றும். ஆனால்  கிடைத்த விடையில் திருப்தி அடையாமல் வேறொரு விடையைத் தேடுவோம்.

இதைத்தான் விடையை நோக்கிய பயணம் என்று குறிப்பிட்டேன்.

ஆன்மீகம் என்ற சொல்லுக்குப் பொருள் காணும் முயற்சியும் இதுபோல்தான். சரி நம் முயற்சியைத் தொடங்குவோம்.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ: